நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.
அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் சில நாட்களுக்கு முன்னர் வெற்றிகரமான நிலவில் தரையிறக்கி அதன் ரோவர் நிலவில் தனது ஆய்வுப் பணியை தொடங்கியது.
பின்னர் நிலவில் 14 நாட்கள் ஆய்வு செய்தபின்னர் நிலவில் சூரியன் மறைந்ததால் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை உறக்கநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டன. நிலவில் மீண்டும் சூரியன் உதயமாகிய பின்னர் இந்த லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.
அதன்படி நேற்று விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் சூரிய ஒளி மீண்டும் வந்த நிலையில், ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவற்றுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முயற்சிகளை மேற்கொண்டதில், இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கப் பெறவில்லை என்றும், அதனை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.எனினும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டது.
விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் 14 நாட்கள் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதை முன்னரே இஸ்ரோ அமைப்பு தெளிவுபடுத்தியது. அதோடு மீண்டும் சூரிய ஒலியை பெற்றாலும் அது செயல்படும் என்பது உறுதியில்லை என்றும் கூறியிருந்தது. அந்த வகையில் 'சந்திரயான் 3' திட்டம் முழு வெற்றியை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.