நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்றைய முன்தினம் (18.09.2023) தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் நாளான நேற்றைய முன்தினம் பழைய நாடாளுமன்றத்தில் 75 ஆண்டுகால விவாதத்தில் அனைத்து கட்சி எம்.பி-களும் பங்கேற்று உரையாற்றினர். தொடர்ந்து நேற்று முதல் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை பிரதமர் மோடி தாக்கல் செய்தார். இந்த மசோதாவானது பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த கோரிக்கையாகும். முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், போதிய ஆதரவு பெறவில்லை என்பதால் இது சட்டமாக ஆக்கப்படாமலே இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய ஆதரவு தெரிவித்தாலும், இந்த மசோதாவை பாஜக இப்பொது தாக்கல் செய்வதற்கு அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல்தான் காரணம் என விமர்சித்து வருகிறது.
அது மட்டுமின்றி, இந்த மசோதாவானது தற்போது தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அமல்படுத்த வேண்டுமென்றால், முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அதன்பிறகு தொகுதி மறுவரையறையும் செய்ய வேண்டும். பின்னரே மகளிருக்கான தொகுதி பங்கீட்டை முறைப்படுத்த முடியும் போன்ற சிக்கல்கள் உள்ளன.
இந்த நிலையில், மக்களவையில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் வாக்குச்சீட்டு பதிவு நடைபெற்றது. 456 பேர் வாக்களித்ததில், 454 பேர் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாகவும், 2 பேர் இந்த மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர். எனினும் 454 பேர் வாக்குகள் ஆதரவோடு இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.