உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிதக்தீப் சிங் சாஹல். 15 வயது கொண்ட இந்த சிறுவன்தான் தற்போது உலகிலயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 15 வயது கொண்ட இந்த சிறுவனுக்கு முடி வளர்ப்பதில் ஆர்வம் இருந்துள்ளது. அதன்படி இந்த சிறுவனின் தலைமுடியின் நீளம் 4 அடி (146 செ.மீ) மற்றும் 9.5 அங்குலம் கொண்டதாக இருக்கிறது.
பொதுவாக கூந்தலை பராமரிப்பது கடினமான ஒன்று என்பதாலே, தற்போதுள்ள காலத்தில் பெண்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப முடிகளை வெட்டிக்கொள்கின்றனர். ஆனால் இந்த சிறுவன் தனது முடியை வளர்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். அதற்காக தனது முடிகளுக்கு என்று பிரத்யேகமாக நேரத்தை செலவிடுகிறார். வாரத்துக்கு 2 முறை தலைக்கு குளிக்கும் இவர், அதனை காய வைப்பதற்கே நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்கிறார்.
மேலும் இயற்கை பொருட்கள் அடங்கிய எண்ணெய்கள் உள்ளிட்டவையை பயன்படுத்தி வருகிறார். சீக்கிய குடும்பத்தை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் முடி வளர்ப்பதை நண்பர்கள் கிண்டல் செய்தபோதெல்லாம் வேதனையாக இருந்து வந்துள்ளார். ஆனால் தற்போது இதுதான் தனது அடையாளம் என்று பெருமையாக கூறுகிறார்.
தான் சீக்கியர் என்பதால் தனது தலைமுடியை தலைப்பாகை வைத்து மறைத்து வைத்துள்ளார். ஆனால் இப்போது, தனது தலைமுடி உலக சாதனை படைத்துள்ளதை பெருமையாக தெரிவித்து வருகிறார். இந்த நிகழ்வு உத்தர பிரதேசத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல் பலரும் உலக சாதனைகள் படைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, அமெரிக்காவை சேர்ந்த எரின் ஹனிகட் என்ற 38 வயது பெண் ஒருவர் உலகின் மிக நீளமான தாடி வளர்த்த பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்தார்.
முன்னதாக இதே போல் நீளமாக தாடி வளர்த்த சில பெண்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு 25.5 செ.மீ அளவு தாடி வளர்த்து அமெரிக்காவை சேர்ந்த விவியன் வீலர் என்ற 72 வயது மூதாட்டி கின்னஸ் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.