தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி 110-ன் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகத்தான திட்டத்தை நாடு முழுவதும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆங்கில பத்திரிகைகளும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறது.
இந்த திட்டம் மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கள் பெற்றோர் காலை எழுந்து பணிக்கு செல்வதால் மாணவர்கள் முறையான உணவை உட்கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வடைகின்றனர். எனவே முதலில் சாப்பாடு பின்னரே படிப்பு, என்ற எண்ணத்தில் குழந்தைகளின் நலன் கருதி இந்த திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த அருமையான திட்டத்தால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தெலங்கானா முதல்வரின் செயலர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியினர் நலத்துறை செயலர் கிறிஸ்டினா சொங்து, கல்வித் துறை செயலர் கருணா வக்காட்டி, முதல்வரின் சிறப்புப் பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ், மாற்றுத் திறனாளிகள் துறை சிறப்புச் செயலர் பாரதி ஹொல்லிக்கேரி ஆகிய 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உணவு தயாரிப்பு, அதன் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து கிராமப் பகுதிகளிலும் இந்த திட்டம் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்டம் நன்றாகவே செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் தற்போது இந்த திட்டம் அம்மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் தற்போது தெலங்கானா மாநில அரசு காலை உணவு திட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தவுள்ளது. அதன்படி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தங்கள் மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக அம்மாநில பட்ஜெட்டில் ஆண்டுதோறும் ரூ.400 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் இந்த அருமையான திட்டத்தை வரும் அக்டோபர் 24-ம் தேதி விஜயதசமி (தசரா) பண்டிகையை முன்னிட்டு தெலங்கானா மாநில மக்களுக்கு பரிசாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. Mukhyamantri Alpahara என்ற முதலமைச்சரின் காலை உணவு திட்டம், தமிழ்நாட்டை தொடர்ந்து தெலங்கானாவிலும் அறிமுகப்படுத்தபடவுள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.