உத்தர காண்ட் மாநிலம் டேராடூன் அருகே இருந்த சாலை பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அந்த வழியே சென்றவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அந்த சடலத்தை மீட்டு அது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை நடத்தியபோது, ராணுவ வீரரான ரமேந்து உபாத்யாய் (40 ) என்பவர்தான் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்தது.
ராணுவ வீரர் ரமேந்து உபாத்யாய் மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் பணிபுரிந்துவந்த போது அங்கு ஸ்ரேயா ஷர்மா (30) என்ற பெண்ணை அங்குள்ள பார் ஒன்றில் சந்தித்துள்ளார். தொடர்ந்து இருவரும் நெருக்கமாகி பழகி வந்துள்ளனர்.
இதனிடையே ரமேந்து உபாத்யாய்க்கு டேராடூனின் பணிமாறுதல் வழங்கப்பட்ட நிலையில், அவருடன் ஸ்ரேயா ஷர்மாவும் டேராடூன் வந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். ரமேந்து உபாத்யாய்க்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஸ்ரேயா ஷர்மா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரேயா ஷர்மாவை கொலை செய்யநினைத்த ரமேந்து உபாத்யாய் அவரை வெளியே அழைத்துச்சென்று யாரும் இல்லாத இடத்தில் வைத்து தான் கொண்டுவந்த சுத்தியலால் அடித்து அவரை கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.