கர்நாடக மாநிலம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 55 மலைப்பாம்புகள் உட்பட 72 பாம்புகளைக் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பேங்காக்கில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் எடுத்து வந்த பெரிய சூட்கேஸில் ஏதோ நெளிந்து கொண்டே இருந்துள்ளது. இதைக் கவனித்த அதிகாரிகள் அந்த பயணியை அழைத்துச் சென்று அவரது உடமைகளைச் சோதனை செய்தனர்.
அதில், 55 மலைப்பாம்பு குட்டிகள், 17 ராஜநாக பாம்பு குட்டிகள், 6 கேப்புச்சீன் வகை குரங்குகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் 6 குரங்கு குட்டிகளும் இறந்த நிலையிலிருந்தன. எதற்காகக் கொடிய விஷமுள்ள இந்த பாம்புகள் இந்தியாவுக்குக் கடத்தி வரப்பட்டது என்றும், இறந்த குரங்கு குட்டிகள் எதற்காகக் கொண்டு வரப்பட்டது என்றும் அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.