புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்து வரும் வடமாநில மாணவி லாவண்யா. இவரது காதலன் கடந்த ஆறு மாதமாக இவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை இவர் பார்த்துள்ளார்.
அதில், உங்கள் குடும்பத்தில் பிரச்சினையா? காதல் பிரச்சினையா? தொழிலில் பிரச்சினையா? எதுவாக இருந்தாலும் நாங்கள் மாந்திரீக முறையில் தீர்த்து வைக்கிறோம் என்று இருந்துள்ளது.
இதைப்பார்த்த லாவண்யா, அந்த வலைத்தளத்தில், தனது காதலனுடன் பிரச்சனை உள்ளது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இவரைத் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், " நான் சொல்கிற சில விஷயங்களைச் செய்து, மாந்திரீக பூஜைக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் காதலனுடன் சேர்த்து வைக்கிறோம். இதற்கு அதிகப் பணம் செலவாகும்" என்று கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சம் வரை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பியுள்ளார். இவ்வளவு செய்தும் காதலன் அவரை தொடர்பு கொள்ளாமலே இருந்தபோதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை லாவண்யா உணர்ந்துள்ளார்.
பின்னர் இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.