மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு பின்னர் அங்கு இணையம் மீண்டும் வழங்கப்பட்டபோது சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது. மேலும் இதுபோன்ற பல்வேறு கொடுமையான சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன.
எனினும் ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அங்கு தற்போது பல்வேறு இடங்களில் வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில் பதற்றம் நிறைந்த இரு மாவட்டங்களுக்கு இடையே பாதுகாப்பு படையினர் அமைத்திருந்த தடுப்பை அகற்றக்கோரி ஊர்வலம் சென்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மணிப்பூர் கலவரத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான சுராச்சன்பூர் மற்றும் பிஷ்ணுபூ மாவட்ட எல்லையில் பாதுகாப்பு வீரர்கள் தடுப்புகளை அமைத்து இருந்தனர். இதன் காரணமாக தங்களால் வேறு இடத்துக்கு செல்லமுடியவில்லை என அந்த பகுதியை சார்ந்தவர்கள் புகார் தெரிவித்த நிலையில், அந்த தடுப்புகளை அகற்ற ஊர்வலம் செல்லவுள்ளதாக மெய்தி சமூகத்தை சேர்ந்த அமைப்பு அறிவித்தது.
அதன்படி இந்த தடுப்புகளை நோக்கி அறிவித்தபடி போராட்டகாரர்கள் ஊர்வலமாக சென்றனர். அதே நேரம் இந்த ஊர்வலத்தை தடுக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் கொண்டும் போராட்டகாரர்களை தாக்கினர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் மணிப்பூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.