நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது.
'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.
அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி அன்று வெற்றிகரமான நிலவில் தரையிறக்கப்பட்டது. இதனை இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆரவாரத்தோடு கொண்டாடினர்.இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது.
நிலவில் தரையிறங்கியதும் விக்ரண் லேண்டரில் இருந்து வெளிவந்த ரோவர் கடந்த 11 நாட்களாக நிலவை ஆய்வு செய்து வந்தது. இதில் நிலவில் ஆக்சிஜன், கந்தகம், டைட்டானியம், மாங்கனீசு போன்ற தனிமங்கள் இருப்பது இஸ்ரோவுக்கு கிடைத்தன. இந்த சூழலில் ரோவர் வரும் செப்டம்பர் 22- வரை ஓய்வெடுக்கவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலவின் தென்துருவ பகுதியில், தற்போது சூரிய வெளிச்சம் குறைந்து இருள் சூழ்ந்து வருவதால், பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டு, உறக்கநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், அதன் கருவிகளும், அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இனி அடுத்து செப்டம்பர் 22-ம் தேதி ரோவர் இருக்கும் இடத்தில் சூரியன் வரும்போது சூரிய சக்தியைப் பெற்று ரோவர் மீண்டும் செயல்படும் என்றும் கூறியுள்ளது. அதோடு, அதுவரையிலும் நிலவுக்கான இந்தியாவின் தூதராக அது அங்கேயே நிலைகொண்டிருக்கும் என்றும் இஸ்ரோ சமூக வளைதள பதிவில் கூறப்பட்டுள்ளது.