ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த உண்டியலைக் கோயில் நிர்வாகம் 15 நாட்கள் ஒருமுறை என்று காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று வழக்கம் போல் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்த காசுகள் எண்ணப்பட்டது. அப்போது அதில் ஒரு காசோலை இருந்தது. இந்த காசோலையில் ரூ.100 கோடி என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.
மேலும் காசோலையில் வராஹ லக்ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம் என்று எழுதப்பட்டிருந்தது. அதோடு முதலில் ரூ.10 என எழுதப்பட்டு அது அழிக்கப்பட்டு, பிறகு அருகே ரூ.100 கோடி என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் கோயில் நிர்வாகத்திற்கு இந்த காசோலை மீது சந்தேகம் எழுந்துள்ளது.
பின்னர் இந்த காசோலையின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் பொட்டேபள்ளி ராதா கிருஷ்ணாவின் வங்கிக் கணக்கு காசோலை என்பது தெரியவந்தது. மேலும் அவரது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்ததும் தெரியவந்தது. இருப்பினும் இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தக் கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.