இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் விக்கிரம் சாராபாயின் ஆலோசனையின் பேரில் இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக்குழு என்ற அமைபை 1962-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அமைத்தார்.
இந்த அமைப்பு மேற்கொண்ட பணிகளின் தொடர்ச்சியாக 1969-ம் ஆண்டு இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்படுத்தினார். தற்போது பெங்களூவை தலைமையிடமாகக் கொண்டு இஸ்ரோ இயங்கி வருகிறது.
1975ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபாட்டா, முன்னாள் சோவியத் யூனியன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் வெறும் ஐந்தே ஆண்டுகளில், 1980ம் ஆண்டில் ஆர்எஸ் 1 என்ற செயற்கைக்கோளை உருவாக்கிய இஸ்ரோ, அதனை எஸ்எல்வி 3 ராக்கெட் மூலம் தனது சொந்த மண்ணில் இருந்து விண்ணில் செலுத்தியது. இதன்மூலம் விண்வெளிக்கு செயற்கைக்கோளை செலுத்தும் வல்லமை கொண்ட 7-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இதன் தொடர்ச்சியாக விண்வெளி ஆராய்ச்சியை உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மூலம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இஸ்ரோ பல சாதனைகளை படைத்துள்ளது. தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு உளளிட்ட தேவைகளுக்கான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. போன்ற ராக்கெட்டுககளை இஸ்ரோ தயாரித்து வருகிறது.
தற்போது, இந்தியாவின் தேவைகளுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களை வணிக ரீதியில் செலுத்தும் நிலைக்கு இஸ்ரோ முன்னேறி உள்ளது. தனது விண்வெளி ஆய்வுத் திட்டங்களின் அடுத்த கட்டமாக, நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான் 1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. அந்த விண்கலம், நிலவின் தென்துருவ பகுதியில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது.
இதனைத் தொடர்ச்சியாக சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்ப இந்தியா முடிவு செய்தது. இதன்படி, சந்திரயான் 2 விண்கலம் 2019ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் 1 போல இல்லாமல், சந்திரயான் 2 விண்கலத்தில் லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் சாதனத்தை இந்தியா அனுப்பியது. ஆனால் சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொருங்கியது. ஆனால், சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் இன்றளவும் நிலவின் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.
நிலவு தொடர்பான ஆராய்ச்சியை கைவிடாத இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை உருவாக்கியது. இந்த விணிகலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமியின் நீள்வட்டப் பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3ன் உயரம் 5 கட்டங்களாக படிப்படியாக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவின் சுற்று வட்டபாதையை நோக்கி உந்தப்பட்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி உந்துவிசைக் கலனில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. ஏற்கனவே நிலவின் சுற்றுப்பாதையில் இயங்கி வரும் சந்திரயான் 2-ன் ஆர்பிட்டரின் தகவல் தொடர்பு அமைப்புடன் விக்ரம் லேண்டர் இணைக்கப்பட்டது. பின்னர் லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்த லாண்டரில் உள்ள அதிநவீன கேமரா மூலம் தரையிறங்குவதற்கு ஏற்ற இடங்களையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை நிலவின் தென்பகுதியில், விக்ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிட்டு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது இஸ்ரோ.
நிலவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தென்பகுதி மிகவும் வேறுபட்ட தட்பவெப்ப தன்மையை கொண்டதாகும். அங்கு அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் கூட இதுவரை விண்கலங்களை தரையிறக்கியதில்லை. ரஷ்யா அனுப்பிய லூனா 25 என்ற விண்கலம், அண்மையில் கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் வல்லரசு நாடுகளால் செய்ய முடியாத சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளனர். நிலவின் தென்பகுதியில் லேண்டரை களமிறக்கும் முதல்நாடு என்ற வரலாற்றப் பெருமையையும் இந்தியாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பெற்றுத்தர உள்ளனர்.
நிலவின் தென்பகுதியில் தரையிறக்கப்பட்டவுடன் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் எனப் பெயரிடப்பட்டுள்ள ரோவர் நிலவின் தரையில் இறங்கும். இந்த ரோவரில் உள்ள கருவிகள், நிலவின் மேற்பரப்பில் சுமார் 14 நாட்கள் ஆய்வு செய்து, லேண்டருக்கு தகவல்களை அனுப்பும். அந்த லேண்டர், தனக்கு வரும் தகவல்களை ஆர்பிட்டருக்கு அனுப்பும். அந்த ஆர்பிட்டரில் இருந்து வரும் தரவுகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் சேகரிக்கப்படும். இந்த ஆய்வுகள் மூலம் நிலவு குறித்த புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.