இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த தொடர் கனமழையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இமாச்சலம் ஒரு மலை பிரதேசமாக இருப்பதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமின்றி 11 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் மட்டுமே 78 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர். தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்தே காணப்படுகிறது. ஏற்கனவே ஜூன் 24ஆம் தேதி முதல் அங்கு நிகழ்ந்த மழை தொடர்பான துயர சம்பவங்களில் 217 பேர் உயிரிழந்தது விட்டதாக மாநில அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பலரும் தங்கள் வீடுகள் உடமைகளை இழந்து வாடுகின்றனர். பேரிடர் மீட்பு எந் நேரத்திலும் தயார் நிலையில் இருக்கின்றனர். இதனால் இமாச்சலப் பிரதேசத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.200 கோடி நிதியுதவி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இமாச்சலுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான பத்திரிகை செய்தி பின் வருமாறு : -
" கடந்த சில நாட்களாக கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக 10 கோடி ரூபாய் வழங்கி, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, இன்று (22-8-2023) காலை இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பேரிடரால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் காரணமாக அம்மாநில மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட கடும் சேதங்கள் தன்னை மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மிகவும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை திறமையாக மேற்கொண்டு வருவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சர் அவர்களை பாராட்டியுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக இமாச்சல பிரதேச அரசுக்கு ரூபாய் 10 கோடி வழங்குவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.