உத்தர பிரதேச லக்னோவில் சில பொதுவெளி இடங்களில் சிலர் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாக்குகின்றனர். இதனால் ஒரு சில இடங்களில் நோ பார்க்கிங் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி அந்த இடங்களில் யாரேனும் பார்க்கிங் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் பகுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது தனது காரை நோ பார்க்கிங் இடத்தில் விட்டுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த ட்ராபிக் போலீசார், உடனே அந்த காரை தள்ளி ஓரமாக நிறுத்தியுள்ளனர். அந்த காரில் மாவட்ட நீதிபதி என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இருப்பினும் போலீசார் அவ்வாறு செய்ததை கண்ட அந்த இளைஞர், உடனடியாக ட்ராபிக் போலீசாரிடம் ஈடுபட்டார்.
தொடர்ந்து அவர்களிடம் அந்த இளைஞர் அத்துமீறியும் பேசியுள்ளார். மேலும் தான் ஒரு மாவட்ட நீதிபதியின் மகன் என்றும், தனது தன்னிடம் ஒப்படைக்கா விட்டால், விளைவு மோசமாக இருக்கும் என்றும் மிரட்டியுள்ளார். இருப்பினும் போலீசார் அந்த காரை அவரிடம் ஒப்படைக்காமல் இளைஞருக்கு அபராதம் விதித்தனர்.
ஆனால் அவரோ அதனை செலுத்த மறுத்து தனது வாகனத்தை ஒப்படைக்கும்படி மிரட்டி கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி, "நீங்கள் என் காரை விடுவிக்கவில்லை என்றால், உங்களுக்கு நான்கு அறைகள் கிடைக்கும். அந்த அறைகள் உங்களுக்கு இங்கே வேண்டுமா அல்லது காவல் நிலையத்தில் வைத்து வேண்டுமா?" என்றும் தகாத முறையில் அத்துமீறி பேசியுள்ளார்.
இதையடுத்து இந்த விவகாரம் உயர் அதிகாரிகள் வரை செல்லவே, அவர்கள் அந்த இளைஞர் மீது வழக்கு எதுவும் பதியவிடாமல், அவருக்கு அபராதம் மட்டும் விதித்து அங்கிருந்து அனுப்பி விட்டனர். சுமார் 30 மணி நேர போராட்டத்துக்கு பிறகு நீதிபதியின் மகன் ரூ.1,100 அபராதம் கட்டி விட்டு, தனது காரை எடுத்து அங்கிருந்து சென்று விட்டார்.
இளைஞரின் இந்த செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. தொடர்ந்து தங்கள் கடமையை முறையாக செய்த டிராபிக் போலீசுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த சம்பவத்ததால் அந்த பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.