பீகார் மாநிலம் அக்பர்பூர் பகுதியை அடுத்துள்ளது பூர்னியா பகுதியை சேர்ந்தவர் பினோத் மண்டல். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள், தந்தை என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் பினோத்தின் மகள் அன்ஷு குமாரி (Anshu Kumari) என்ற 23 வயது இளம்பெண் காணாமல் போயுள்ளார்.
இதனால் பெரும் அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ், காணாமல் போன அன்ஷுவை 1 மாதமாக தேடி வந்தனர். தீவிரமாக தேடிய நிலையிலும், அன்ஷு கிடைக்கவில்லை. இந்த சமயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால்வாய் ஒன்றில் பெண் ஒருவரது சடலம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர்.
தொடர்ந்து பினோத்துக்கு தகவல் கொடுத்து அவரும் வந்து அது தனது மகள் என்று அடையாளம் காட்டினார். இதையடுத்து மீட்கப்பட்ட சடலத்தை போலீசார் பினோத் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள் வழக்கமாகி செய்யக்கூடிய இறுதி சடங்கை செய்து விட்டு மயானத்துக்கு கொண்டு போய் அந்த சடலத்தை எரித்தனர்.
அப்போது தனது மகளுக்கு கொல்லி வைப்பதை நினைத்து அழுதுகொண்டே இருந்ததால் பினோத் சம்பவ இடத்திலேயே மயங்கினார். இதனால் அந்த சடலத்துக்கு பினோத்தின் தந்தை கொல்லி வைத்தார். இப்படி அனைத்தும் முடிந்து அனைவரும் வீடு திரும்பியபோது, சனிக்கிழமை திடீரென அன்ஷுவின் மொபைல் எண்ணில் இருந்து வீடியோ கால் ஒன்று வந்துள்ளது.
அதனை எடுத்து பேசுகையில், "அப்பா நான் அன்சு பேசுறேன்.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு குடும்பமே பெரும் அதிர்ச்சியில் உறைந்தது. தொடர்ந்து அவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு வந்து விட்டதாகவும், தற்போது அவரது மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் பினோத்தின் குடும்பத்தார் ஒரு பக்கம் மகிழ்ச்சியில் இருந்த போதிலும், தங்கள் மகள் வீட்டை விட்டு சென்றதால் வேதனையும் அடைந்துள்ளனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது மேற்கொண்ட விசாரணையில் காணாமல் போன அன்ஷு, அதே பகுதியில் வசிக்கும் தனது காதலனை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
எனினும் தகனம் செய்யப்பட்ட பெண்ணின் சடலம் யாருடையது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.