மத்திய பிரதேசத்தில் மோரினா என்ற பகுதியில் அமைந்துள்ளது பக்சினி என்ற கிராமம். இங்கு திரிலோக் பர்மர் (Trilok Parmar) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பிந்த் என்ற பகுதியை சேர்ந்த ராக்கி இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு பெரியோர்களால் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு திரிலோக் பர்மர் - ராக்கி தம்பதிக்குள் சிறு சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து திரிலோக் பர்மர், தனது மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் தினமும் தனது வீட்டுக்கு இதுகுறித்து தெரிவித்து வந்துள்ளார் மனைவி ராக்கி. இருப்பினும் இவர்களுக்குள் இருக்கும் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்தே வந்த நிலையில், சம்பவத்தன்றும் தனது குடும்பத்தாரிடம் தன்னை வந்து அழைத்து செல்லும்படி கூறியுள்ளார் இளம்பெண் ராக்கி.
இதையடுத்து திரிலோக் பர்மர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராக்கியின் சகோதரர் யுவராஜ், சகோதரி ஜூலி ஆகியோர் ராக்கியை அழைத்து செல்ல வந்துள்ளனர். அப்போது திரிலோக் பர்மரின் தாயாரிடம் இவர்களுக்குள் இருக்கும் விவகாரத்தை சுட்டிக்காட்டி ராக்கியை தங்களுடன் அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். இதனால் தாயாருக்கும், சகோதரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்து ராக்கியை அழைத்து சென்று பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். இதனிடையே தங்களுடன் ராக்கி குடும்பத்தார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை தனது மகன் திரிலோக் பர்மருக்கு போன் செய்து கூறியுள்ளார் தாய். இதனை கேட்டதும் ஆத்திரம் கொண்ட அவர், உடனடியாக வீட்டுக்கு வந்து தனது நாட்டு துப்பாக்கியை எடுத்து பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அங்கே நின்று கொண்டிருந்த மனைவி ராக்கி, அவரது சகோதரர்கள் யுவராஜ், ஜூலி ஆகியோரை சுட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சகோதரர்கள் உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடி கொண்டிருந்த ராக்கியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் உயிரிழந்தார். இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளி திரிலோக் பர்மரை தேடி வருகின்றனர். குடும்ப சண்டையில் தனது மனைவி அவரது சகோதரர்களை சுட்டு கொன்ற இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.