ஏர் இந்தியா தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டதில் இருந்து விமான நிறுவனங்கள் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறது. விமான தொழில்நுட்ப சிக்கல்கள் தொடங்கி பணியாளர் நடத்தை வரை பல்வேறு விவகாரங்கள் பொதுவெளிக்கு வந்த விமர்சனத்தை ஏற்படுத்திவருகிறது.
அதிலும் இண்டிகோ நிறுவனம் தற்போது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறங்கியதில் இருந்து நடுவானில் ஆக்சிஜன் பற்றாக்குறை வரை இண்டிகோ நிறுவனத்தின் பெயர் பெரிய அளவில் அடிபட்டுள்ளது.
அதுதவிர ஹிந்தி மொழிக்கு முன்னுரிமை, பிராந்திய மொழிகள் புறக்கணிப்பு தொடங்கி பயணிகளை அவமரியாதை செய்வது எனவும் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பலர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது இண்டிகோ நிறுவனம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அந்த வகையில் நேற்று சண்டிகரில் இருந்து ஜெய்ப்பூருக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இயக்கப்பட்டுள்ளது. இதில் ஆரம்பத்தில் விமானத்தின் ஏசி வேலை செய்யாமல் இருந்துள்ளது. எனினும் இது சரி செய்யப்படும் என கூறப்பட்டதைத் தொடர்ந்து விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் தொடர்ந்து விமானத்தின் ஏசி வேலை செய்யாமல் இருந்ததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இது குறித்து கேட்டபோது விமான ஊழியர்கள் டிஸ்யு பேப்பரை கொடுத்ததாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர். எனினும் இறுதிவரை விமானத்தில் ஏ.சி வேலை செய்யாமல் இருந்துள்ளது. இந்த விமானத்தில் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமரீந்தர் சிங் பயணித்த நிலையில், அவரும் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.