பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறை ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்திலும் வன்முறை வெடித்துள்ளது. இந்த மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சிதான் நடந்து வருகிறது.
ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்திலுள்ள நூஹ் என்ற பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும், அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பினரும் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பேரணியை ஜூலை 31 அன்று நடத்தினர்.
இந்த பேரணியில் வந்தவர்கள், இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புக் கோஷங்களை எழுப்பியபடியே சென்றுள்ளனர். மேலும் இவர்கள் கையில் துப்பாக்கி, வால் போன்ற ஆயுதங்களை எடுத்து வந்துள்ளனர்.
இவர்களது பேரணி குர்கான் - ஆல்வார் இடையே கேட்லா மோட் பகுதியில் வந்தபோது, சிலர் தடுத்துள்ளனர். இதையே தங்களுக்குக் கிடைத்த கலவர வாய்ப்பாக எடுத்துக் கொண்ட விஎச்பி கூட்டத்தினர், உடனடியாக மத வன்முறையில் இறங்கியுள்ளனர்.
ஒருவருக்கொருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். வாகனங்கள், கடைகள், வீடுகளை அடித்து நொறுக்கித் தீவைத்துள்ளனர். கலவரக்காரர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில், ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர், உள்ளூர்க்காரர் ஒருவர் மற்றும் அடையாளம் காணப்படாத ஒருவர் என மொத்தம் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை நூஹ் பகுதியில் மட்டுமல்லாது ஹரியானாவில் பல பகுதிகளிலும் பரவியுள்ளது. இந்த வன்முறைக்குக் காரணமாக பஜ்ரங் தள் உறுப்பினர் மோனு மானேசர் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவர் அண்மையில் வெளியிட்ட சர்ச்சை வீடியோ இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்துள்ளது.அதோடு பசுவதை செய்யப்பட்டதாக இரண்டு இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு மோனு மானேசர் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "வெறுப்பு பேச்சை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. கூடுதல் போலிஸ் மற்றும் மத்திய படைகளை நியமிக்க வேண்டும்.
பதட்டமான பகுதிகளில் சி.சி.டி.வி காமிராக்களை உடனடியாக பொருத்த வேண்டும். வன்முறை விடியோ காட்சிகளைப் பத்திரப்படுத்த வேண்டும்" என ஹரியானா மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஹரியான வன்முறையைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றும் டெல்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்கு வன்முறை பரவாமல் இருக்க அந்த மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரரவிட்டுள்ளது.