மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.
மேலும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த கொடூர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து அவையை ஒத்திவைத்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதோடு பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஏன் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்த எழுந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாமல் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மணிப்பூர் வன்முறையை தடுக்க மாநில அரசும், ஒன்றிய அரசும் தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழு இன்று மணிப்பூர் செல்கிறது. அங்குப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலம் வன்முறையால் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்துபின்னர் மணிப்பூர் ஆளுநரையும் இவர்கள் சந்திக்க உள்ளனர். இன்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குழு மணிப்பூர் புறப்பட்டுச் சென்றது. இந்த குழுவில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இடம் பெற்றுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி, "மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை சொல்வதற்காகவே இந்திய கூட்டணி MPக்கள் குழு செல்கிறது. வன்முறை நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மறுத்து வருகிறார்" என தெரிவித்துள்ளார்.