தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த மழையில் ஹைதராபாத் நகரத்தில் உள்ள ஆல்வால் பகுதியும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மழை நீர் தேங்கியுள்ளதால் பாம்புகள் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன.
இதனால் அச்சமடைந்து உள்ள பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அக்சைய குமார் என்பவர் வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் பாம்பைப் பிடித்துக் கொண்டு நேராக மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்த அதிகாரியின் மேஜை மீது பாம்பைத் தூக்கி வீசியுள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் அதிர்ச்சியடைந்த அங்கிருந்து பதறியடித்து வெளியே வந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மாநகராட்சி அதிகாரியைக் கிண்டல் அடித்து வருகின்றனர்.