ஆந்திரா மாநிலம் பீமாவரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தன்னிடத்தில் வேலைபார்க்கும் ஊழியரிடம் ரூ.4 லட்சம் பணத்தைக் கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்யும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த ஊழியர் பணத்தை வாங்கிக் கொண்டு வங்கிக்கு டெபாசிட் செய்யச் சென்றுள்ளார். அப்போது உணவு இடைவெளி நேரம் என்பதால் 3 மணிக்கு மேல் வரும்படி வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அந்த ஊழியர் வங்கியிலிருந்த வெளியே வந்து எதிரே இருந்த கடையில் பிரியாணி சாப்பிட்டு வரலாம் என முடிவு செய்துள்ளார். பின்னர் பணத்தைத் தான் வந்த இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழ உள்ள சின்ன இடத்தில் ரூ.4 லட்சம் பணத்தை வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் பிரியாணி சாப்பிட்டு விட்டு வந்த பிறகு வாகனத்தின் இருக்கையைத் திறந்து பார்த்தபோது அதில் ரூ.4 லட்சம் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து முதலாளியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்திலிருந்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.
பின்னர் ரூ.4 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.