டெல்லி ரோகிணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ராமகிருஷ்ணன். இவர் தனது மனைவியுடன் குருகிராமில் வசித்து வரும் மகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு மூன்று நாட்கள் தங்கியுள்ளனர்.
அப்போது இவர்களது வீட்டின் அருகே வசித்து வரும் நபர் ராமகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு, 'உங்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே கிளம்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது பொருட்கள் எதுவும் காணாமல் போகவில்லை என்பது உறுதியானது.
இருப்பினும் இது குறித்துக் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் ரூ.500 இருந்ததை போலிஸார் கண்டனர்.
பின்னர் விசாரணையில், வீட்டில் திருடுவதற்கு எந்த விலை உயர்ந்த பொருட்களும் இல்லாததால் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் ரூ.500ஐ வீட்டில் விட்டுச் சென்றது தெரியவந்தது. கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.