பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினர் மற்றும் எதிர்தரப்பினர் மீது நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும், பாஜக, மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்புகளை சேர்ந்தவர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில், தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரை ஆர்.எஸ்.எஸ்- ன் மாணவர் பிரிவான ABVP அமைப்பினர் விரட்டிச் சென்று தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில், தீன் தயாள் உபாத்யாயா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இந்த தொகுதி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியாகும். இந்த பல்கலைக்கழகத்தில், துணைவேந்தராக ராஜேஷ் சிங் என்பவர் செயல்பட்டு வருகிறார். மேலும் அலுவலக பதிவாளராக அஜய் சிங் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த பல்கலைக்கழகத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ்- ன் மாணவர் பிரிவான ABVP அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பின்னர் இந்த பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என பல்கலைக்கழக நிர்வாகத்தினர் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே துணைவேந்தரின் உருவபொம்மையை ABVP அமைப்பினர் எரித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சில மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ABVP அமைப்பினர் இந்த விவகாரம் குறித்து துணைவேந்தரை சந்திக்க சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ABVP மாணவர்கள் துணைவேந்தரின் அறைக்கு வந்து அவரைத் தாக்கியதுடன் அவரது அறையையும் சேதப்படுத்தினர். மேலும் பதிவாளரையும் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்த நிலையில், அவரை தொடர்ந்து தாக்கியுள்ளனர். அதோடு, இதனை தடுக்க முயன்ற போலீசாரையும் ABVP மாணவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.