வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மணிப்பூரில் பள்ளிக்கூடம் சென்ற மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் தொடர் கலவரத்தைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது மேற்கு இம்பாலில் உள்ள பள்ளி ஒன்றில் வழக்கம்போல பள்ளிக்கூடம் சென்ற மாணவி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இறந்த மாணவி யார் என்பது இன்னு அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மணிப்பூர் அரசு மாநிலம் முழுவதும் ஜூலை 10-ம் தேதி வரை மேலும் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.