பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்குக் கூட தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
டெல்லியில் பா.ஜ.க அலுவலகம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தக்காளிக்கே போலிஸ் பாதுகாப்பு போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும் என பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் ரூ.50 கிலோ தக்காளியை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோனி சோமாஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்குச் சொந்தமான பண்ணையில் விற்பனைக்காகத் தக்காளி மூட்டைகளை வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் இந்த பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 50 கிலோ தக்காளியைத் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.