தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் மும்மரமாகச் செயல்பட்டு வருகிறது பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.
அண்மையில் கூட ராகுல் காந்தி தெலங்கானாவிற்கு சுற்றுப்பயணம் செய்து, முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதேபோல் பா.ஜ.க கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் மாற்றப்பட்டுள்ளது அக்கட்சியில் உட்கட்சி பிரச்சனையை எழுப்பியுள்ளது. மேலும் தனக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்ற ஆசையிலிருந்த ரகுநந்தன் ராவ் எம்.எல்.ஏ பா.ஜ.க தலைமை மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
இதனால் பாஜக ஒன்றும் வீழ்த்த முடியாத கட்சி அல்ல என ரகுநந்நதன் ராவ் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வீடியோவில் பேசும் ரகுநந்தன் ராவ்,"அமித்ஷா ஒன்றும் சாணக்கியர் அல்ல. மனுகோடோ இடைத்தேர்தலில் 100 கோடி செலவு செய்து அவரே வந்து பிரச்சாரமும் செய்தார். தோல்விதான் கிடைத்தது.
ஜெ.பி நட்டாவை சந்தித்தபோது, கள தலைவர் ஒருவரை நியமிக்கும்படி நான் கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். தெலங்கானா பா.ஜ.க ஒரு களத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரை என்னவென சொல்வது?
துபாக் தொகுதியில் நானாகத்தான் வெற்றி பெற்றேன். என் வெற்றியில் கட்சியின் பங்களிப்பு பூஜ்யம்தான். எங்களின் முகங்களை பார்த்துதான் மக்கள் ஓட்டுப் போட்டனர், பாஜகவின் சின்னத்தைப் பார்த்து அல்ல" என பேசியுள்ளார்.