காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் வெளி நாட்டுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததார். மேலும் இந்துத்துவா கொள்கையின் பெயரில் பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையினர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்தும் பேசினார்.
இதனால் பா.ஜ.கவினர் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தியை விமர்சித்து பா.ஜ.க தேசிய ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ‘‘வெளிநாட்டில் ராகுல் காந்தி அதிக நாட்கள் செலவழிப்பது ஏன்? அவரது பயணத்தில் பெரும் பகுதி மர்மமாக உள்ளது. ராகுல் காந்தி ஆபத்தானவர் மற்றும் நயவஞ்சக விளையாட்டை விளையாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஜியை சங்கடப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இந்தியாவை அவதூறு செய்கிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் பெங்களூரு ஹை கிரவுண்ட் காவல்நிலையத்தில் அமித் மால்வியா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான பிரியங் கார்கே தலைமையில் கடந்த வாரம் ஹை கிரவுண்ட் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகார் மனு அடிப்படையில் பெங்களூரு போலிஸார் பா.ஜ.க தேசிய ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியாவின் மீது 153A 120b 505(2), 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.