மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருபவர் தர்ஷனா பவார் என்ற 26 வயது இளம்பெண். ஓட்டுநரின் மகளான இவர், நன்கு படிக்க கூடியவராக திகழ்கிறார். மேலும் இவர் அண்மையில் நடைபெற்ற அம்மாநிலத்தின் ரேஞ்ச் வன அதிகாரி பதவிக்கான பொது சேவை ஆணையத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இவரது உடல் சிதைந்த நிலையில் ராஜ்கோட் அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் தர்ஷனா என்று தெரிவந்தது.
பின்னர் அவரது உடலை ஆய்வு செய்தபோது, உடல் மற்றும் தலையில் ஏற்பட்ட அதிபயங்கர காயங்களால் அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இதனை கொலை வழக்காக பதிவு செய்த அதிகாரிகள், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உட்பட பலவற்றை ஆய்வு செய்தனர். அப்போது இந்த சம்பவத்தில் ஆண் நபர் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதனிடையே இளம்பெண் தர்ஷனா, கடந்த 10-ம் தேதி காணாமல் போனதாக அவரது பெற்றோர் 12-ம் தேதி அளித்திருந்தனர். அதாவது, நடந்து முடிந்த வன அதிகாரி தேர்வில் முதலிடம் பிடித்ததால் அவருக்கு பாராட்டு விழாவை தனியார் அமைப்பு சார்னு ஜூன் 10-ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு வீடு திரும்பாத தர்ஷனாவை நண்பர்கள், உறவினர்கள் என தேடினர்.
இதையடுத்தே போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தர்ஷனாவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தர்ஷனா தனது ஆண் நண்பர் ராகுல் ஹந்தோர் என்பவருடன் ராஜ்கோட்டை பகுதியில் நடைபயிற்சி சென்றுள்ளார்.
அப்போது காலை இருவரும் மலைப்பகுதிக்குள் சென்றுள்ளனர். பின்னர் மாலை சுமார் 6 மணியளவில் ராகுல் மட்டும் அதனுள் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அந்த ராகுலை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராகுல் என்பவர் நாசிக் பகுதியிலுள்ள சின்னார் என்ற இடத்தை சேர்ந்தவர். 25 இளைஞரான இவர், புனேவில் சிவில் சர்வீசஸுக்கு தயாராகி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.