ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள ராஜமகேந்திரவரம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரின் பெற்றோர் இருவரும் இறந்து, அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், அந்த பகுதியில் உள்ளவர்கள் அவர்கள் ஒரு ஆசிரமத்தில் சேர்க்க முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி சிறுமியை விசாகப்பட்டினம் புது வெங்கோஜிபாலத்தில் உள்ள பூர்ணானந்தா ஆசிரமத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சேர்த்துள்ளனர். அந்த சிறுமி ஆசிரமத்தில் தங்கி அங்குள்ள சிறுசிறு வேலைகளை பார்த்து வந்துள்ளார்.
தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர், சாமியார் பூர்ணானந்தா அந்த சிறுமியை தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி வந்த சிறுமியை அந்த சாமியார் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதற்கு அந்த சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாமியார் சிறுமியை சங்கிலியால் கட்டி ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதோடு உணவு, தண்ணீர் என எதுவும் வழங்காமல் தொடர்ந்து அந்த அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அப்போது, சாமியார் இல்லாத நேரம் அந்த அறையை சுத்தம் செய்யவந்த பெண், சிறுமியின் நிலையை அறிந்து அந்த சிறுமியை விடுவித்து அங்கிருந்து விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டுள்ளார்.
அங்கு கிழிந்த ஆடைகளுடன் சிறுமி அழுதுகொண்டிருந்த நிலையில், அங்கிருந்தவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது சாமியாரின் கொடூர செயல் தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் சிறுமியை காப்பகத்தில் சேர்த்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலிஸார், சாமியார் பூர்ணானந்தாவை நள்ளிரவில் கைது செய்தனர். மேலும் அந்த ஆசிரமத்தில் இருந்த 10 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சாமியார் பாலியல் தொல்லை கொடுத்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.