கேரளா மாநிலம் கோட்டயத்தை அடுத்தள்ளது மணற்காடு பத்தழகுழி என்ற பகுதி. இங்கு எபி - ஜோன்ஸி தம்பதி வசித்து வருகின்றனர். எபி வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், ஜோன்சி மட்டும் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் இந்த தம்பதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த நிலையில், இந்த 8 மாத குழந்தைக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த மே மாதம் 29-ம் தேதி அவரை கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு கடும் காய்ச்சல் இருந்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் அது சரியாகவில்லை என்பதால் அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் மரணத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் என கூறி உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு இன்பிளிக்சிமாப் என்ற ஊசி போடப்பட்டதாகவும், இந்த மருந்தை செலுத்தினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிந்தும் குழந்தைக்கு அதனை செலுத்தியுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் குழந்தைக்கு அதிக அளவு மருந்து கொடுத்ததும் முறையான கண்காணிப்பில் இல்லாததே மரணத்துக்கு காரணம் என குழந்தையின் குடும்பத்தினர் சுகாதார அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், குழந்தைக்கு ஏற்கனவே இதய நோய் இருந்ததாகவும், மருத்துவமனையில் எந்த மருத்துவக் கோளாறும் இல்லை என்றும், இதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பு அல்ல என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான பதில் அளிப்பதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.