கேரளா மாநிலம் கண்ணூர் முழப்பிலங்காட்டில் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. அதில் நிஹால் நவுஷாத் என்ற 11 வயது சிறுவனும் இருந்துள்ளார். இந்த சிறுவன் பேச்சுத் திறனற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இந்த சூழலில் சம்பவத்தன்று சிறுவன் வெகுநேரமாக காணாமல் போயிருந்துள்ளார். குடும்பத்தினரோ, அக்கம்பக்கத்தில் விளையாடி கொண்டிருப்பதாக எண்ணியுள்ளனர்.
ஆனால் அதிக நேரம் காணவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவர்கள், சிறுவனை தீவிரமாக தேடியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து சுமார் 500 மீ தொலைவில் சிறுவன் இரத்த கோரங்களுடன் கீழே கிடந்துள்ளார். இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து விசாரிக்கையில் சிறுவனை அங்கிருந்த தெருநாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது. இதையடுத்து வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த சிறுவனின் தந்தை, இந்த சம்பவம் அறிந்து இன்று கேரளா வந்தடைந்தார்.
தொடர்ந்து சிறுவனுக்கு உடற்கூறாய்வு முடிந்து, அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் கடித்து குத்தறியதில், பேச்சுத் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுவன் இரத்த வெள்ளத்தில் கொடூரமாக உயிரிழந்துள்ளது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இதுபோல் தெருநாய்கள் கடித்து பலரும் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.