பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்து ஒன்பது வருடங்கள் ஆகிறது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற்றி தொடர்ந்து ஆட்சியிலிருந்து வருகிறது.
இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை பா.ஜ.க கொண்டுவந்துள்ளது. LIC போன்ற பொது பொது சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்துள்ளது. மேலும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இந்து ராஜியத்தை எப்படியாவது கொண்டுவந்துவிட வேண்டும் என பா.ஜ.க அரசு தனது அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மாநில உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இம்மாதம் ஜூன் 12ம் தேதி எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்ததால் இந்த கூட்டம் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாட்னாவில் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.