முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "95 வயது வரை வாழ்ந்த தலைவர் கலைஞர் அவர்கள்-இன்னும் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரேயானால் - இதோ இந்த மேடையில் நடுநாயகமாக அவரே அமர்ந்திருப்பார். முதுமையின் காரணமாக அவர் உடல் நலிவுற்றார்கள்.
முதுமையின் காரணமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்கள். பிரிந்தார்கள் என்று சொல்வதை விட - நான் அடிக்கடி சொல்லி வருவதைப் போல - மறைந்திருந்து நம்மை தலைவர் கலைஞர் அவர்கள் கண்காணித்துக் கொண்டு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். எந்த நிகழ்ச்சிகளுக்குப் போனாலும் - எந்த திட்டங்களைத் தீட்டினாலும் - எந்த விழாக்களில் பங்கெடுத்தாலும் - எந்த நிலைப்பாடுகளை எடுத்தாலும் - தலைவர் கலைஞர் அவர்கள் என்னை மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் என்ற எண்ணத்தோடு தான் நான் தினமும் அவர் நினைவுகளாகத் தான் இருக்கிறேன்.
அந்த நினைவுகளின் காரணமாகத் தான் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று அவரது நினைவகத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறேன். அந்த வகையில் இந்த மேடையில் தலைவர் கலைஞர் அவர்களும் அமர்ந்திருப்பதாகவே நினைக்கிறேன்.
என் உயிரோடு கலந்து இருக்கக்கூடிய முத்தமிழறிஞரின் அன்பு உடன்பிறப்புகளே.. ஜூன் 3ஆம் தேதி ஒடிசா விபத்தின் காரணமாக நடைபெறவிருந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது அதனை தான் மனிதநேய மாண்பாளர் கலைஞர் விரும்பியிருப்பார். கலைஞர் புகழை பரப்பவேண்டியது நம் அனைவரின் கடமை.
95 வயது வரை வாழ்ந்த கலைஞர் இன்னும் 5 ஆண்டுகள் இருந்திருந்தால் நம்மோடு நடு நாயகராக அமர்ந்திருப்பார். அவர் மறைந்தார் என்பதை விட நம்மோடு இருந்து நம்மை கண்காணிக்கிறார் என்றே நினைக்கிறேன். நம்மைப் பொறுத்தவரையில் தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் - இனமானப் பேராசிரியர் அவர்களும் , உணர்வுகள். உணர்வுகள் என்பவை அவர்களது மறைவுக்குப் பிறகும் நமக்கு உயிரூட்டிக் கொண்டிருப்பவை ஆகும்.
எங்களின் உயிரே! எங்களின் எழுச்சியே!
எங்களின் உணர்ச்சியே!
எங்களின் வழிகாட்டியே!
எங்களின் கலங்கரை விளக்கமே!
எங்களின் உதயசூரியனே!
தலைவர் கலைஞர் அவர்களே! உங்களின் 100 ஆவது பிறந்தநாளை இன்று முதல் கொண்டாடத் தொடங்குகிறோம்!
தலைவர் கலைஞர் அவர்களே!நீங்கள் எப்போதும் உடன்பிறப்புகளுக்கு மத்தியில் தான் எப்போதும் இருப்பீர்கள்!இதோ உங்களது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு மத்தியில் நூற்றாண்டு விழா தொடங்குகிறது! தலைவர் கலைஞர் அவர்களே!
நீங்கள் எப்போதும் கழகத்தின் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப்பொதுச்செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆகிய அனைவரையும் சூழ வைத்துக் கொண்டு தான் உங்களது பிறந்தநாளைக் கொண்டாடுவீர்கள்! இதோ உங்களது கழகத் தளகர்த்தர்களுக்கு மத்தியில் நூற்றாண்டு விழா தொடங்குகிறது!
தலைவர் கலைஞர் அவர்களே! நீங்கள் எப்போதும் தோழமைக் கட்சித் தலைவர்களின் தோளோடு சேர்த்துக் கொண்டு தான் வலம் வருவீர்கள்! இதோ இந்த மேடையில் ஆசிரியர் அய்யா உள்ளிட்ட தோழமை இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் இடம்பெற உங்களது நூற்றாண்டு விழா தொடங்குகிறது!
1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதே - அந்த வட சென்னையில் உங்களது நூற்றாண்டு விழா தொடங்குகிறது! தலைவர் கலைஞர் அவர்களே!
கழகத்துக்கு என அறிவகத்தை உருவாக்கிக் கொடுத்தாரே அதே வட சென்னையில் உங்களது நூற்றாண்டு விழா தொடங்குகிறது! இந்த நூற்றாண்டின் தலைவரான தலைவர் கலைஞருக்கு - விழா எடுக்க தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களும் பொருத்தமானவை தான் என்றாலும் - கழகம் தோன்றிய வட சென்னை பகுதியில் நாம் இந்த நூற்றாண்டு விழாவைத் தொடங்குவது மிகமிக பொருத்தமானது.
75 ஆண்டுகளுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விதை போட்ட பகுதியில் இருந்து - விருட்சமாக இந்த இயக்கத்தை வளர்த்துக் காட்டிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்போடு - நான் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாண்டமானதாக நடத்திக் காட்டி இருக்கும் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் - செயல்பாபு என்று என்னால் எப்போதும் அழைக்கப்படும் சேகர் பாபுவையும் -
அவருக்குத் தோழோடு தோள் கொடுத்து விழா சிறக்க பணியாற்றி வரும் கிழக்கு மாவட்டச் செயல்வீரர்கள் அனைவருக்கும் - தலைமைக் கழகத்தின் சார்பிலும் - என்னுடைய தனிப்பட்ட முறையிலும் - நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டு முழுவதும் - 365 நாளும் தலைவர் கலைஞரைக் கொண்டாட இருக்கிறோம். இந்தக் கொண்டாட்டங்களின் மூலமாக தலைவர் கலைஞருக்கு இதுவரை கிடைக்காத புதிய புகழைச் சேர்க்கப் போகிறோம் என்பதல்ல.
நாம் நம் நன்றியின் அடையாளமாக இதனைக் கொண்டாடப் போகிறோம். நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல, சாமானியர் வீட்டுப் பிள்ளை என்று சொன்னார் கலைஞர். அவரது ஆட்சியே சாமானியர்களுக்கான ஆட்சி தான்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளிகள் பயன் பெறும் ஆட்சியாகத் தான் இருந்தது! திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது 'முரசொலி' இதழில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள்.... '' ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில்! இனி ஏழைக்கு வாழ்வு வந்தது" - என்று கலைஞர் அவர்கள் எழுதினார்கள்! ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் பேரறிஞர் அண்ணா! ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர்! இவர்கள் ஆட்சி ஏழைகள் சிரிக்கும் ஆட்சியாகத் தான் இருந்தது.
* குடிசை மாற்று வாரியம்.
* ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம்.
* தொழுநோயாளிகள் இல்லம், பிச்சைக்காரர் மறுவாழ்வு மையங்கள்.
* ஏழைகளுக்கு கண்ணொளி திட்டம்.
* விதவைகள் மறுவாழ்வுக்கு நிதி .
* தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்குதல்.
*விவசாய தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க கணபதியா பிள்ளை ஆணையம்.
* நகர்ப்புற தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம்.
* விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகள் அவர்களுக்கே சொந்தம் ஆக்கும் வகையில் குடியிருப்பு மனைச் சட்டம்.
* கை ரிக்ஷாவை ஒழித்தது ! இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது.
* ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டமும், அவர்களுக்கான தொழிற்சாலைகள் அமைத்தது !
* ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்து அந்தச் சொல்லுக்கு சட்ட அங்கீகாரம் தந்தவர் கலைஞர்!
* இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும் கலைஞர்!
* ஏழை நடுத்தர வகுப்பு மகளிருக்கு இலவசக் கல்வி வழங்கினார்.
* ஏழை பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் கொண்டுவந்தார்.
*குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் மகளிருக்கு உதவித் திட்டம் கொண்டு வந்தார்.
* மாணவர்க்கு இலவச பேருந்து பாஸ் வழங்கியதும் கலைஞர்!
* அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்கியதும் கலைஞர்!
* அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்ததும் கலைஞர்!
* உழவர் சந்தைகள் திறந்ததும் கலைஞர்!
* சமத்துவபுரங்கள் உருவாக்கியதும் கலைஞர் - இப்படி இன்று முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம்!
அந்தளவுக்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாக தமிழ்நாட்டு ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர் முதல்வர் கலைஞர்!
இந்த மேடையில் இருக்கும் அனைத்து தோழமை இயக்கங்களுக்குமான வழிகாட்டி என்பதால் தான் அனைத்து தலைவர்களும் இங்கே ஒருசேர வந்திருக்கிறீர்கள். தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் - ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற எல்லைகளைக் கடந்து உலகத் தலைவராகச் செயல்பட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
ஒரு தத்துவத்தின் தலைவராக தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தார்கள்.
கடந்த காலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். நிகழ்காலச் செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர் தலைவர் கலைஞர். இன்றைக்கு திராவிட மாடல் என்ற தத்துவத்தோடு ஒரு ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம் என்றால் அந்த திராவிடவியல் நிர்வாகக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர் தலைவர் கலைஞர்.
சமூக நீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - இன உரிமை - மொழிப்பற்று - மாநில சுயாட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உன்னதமான கோட்பாடு தான் திராவிடக் கோட்பாடு ஆகும். எல்லார்க்கும் எல்லாம் என்பதே அதனுடைய உள்ளடக்கம் ஆகும்.
எல்லார்க்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது, போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
படிப்பு மறுக்கப்பட்ட சமூகத்துக்கு படிப்பைக் கொடு! கல்லூரிக் கல்வியை அடையமுடியாதவர்க்கு கல்லூரிக்கல்வியைக் கொடு! ஏழை, எளிய விளம்பு நிலை மக்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுத்து! வர்ணம், சனாதனத்தின் பேரால் ஒதுக்கப்படுபவர்களுக்கு அந்த உரிமையைப் பெற்றுத்தா!
ஆணுக்கு நிகர் பெண்! பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கு! பெருந்தொழில்கள் மட்டுமல்ல, சிறுதொழில்களும் வளர்த்தெடு!
நகர்ப்புற பகுதிகள் மட்டுமல்ல கிராமப்புறங்களும் செழிக்க வேண்டும்!அனைத்து தொழில்களும் சிறக்க வேண்டும்.அனைத்து மாவட்டங்களும் வளம் பெற வேண்டும்.மாநிலத்தின் வளம் என்பது மாநிலத்து மக்களின் சிந்தனை வளர்ச்சியின் மூலமாகத் தெரிய வேண்டும்!- இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியாகும்.
இதுதான் தமிழ்நாடு என்ற மாநிலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக வளர்ப்படுத்தப் போகிறது. நாளையே இது நடந்து விடும் என்று சொல்லும் கற்பனாவாதியில்ல நான். ஆனால் திராவிட மாடலே அதனைச் செய்து காட்டும் என்ற நம்பிக்கை வாதி நான். காட்டும் என்ற தன்னம்பிக்கை வாதி நான்.இந்த தைரியத்தையும் தன்னம்பிக்கையும் என்னுள் விதைத்தவர் கலைஞர்.
நான் அவரது கொள்கை வாரிசு. எனவே, பேரறிஞர் அண்ணா போட்டுத் தந்த பாதையில் - கலைஞர் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களின் மூலமாக கடந்த ஐம்பதாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த பயனை நாட்டு மக்களுக்குச் சொல்லக் கூடிய வாய்ப்பாகத் தான் இந்த நூற்றாண்டு விழாவை நான் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர் கால் படாத இடமில்லை. சந்திக்காத மனிதர்களில்லை. தொடங்காத திட்டமில்லை. உருகாத உடன்பிறப்புகளில்லை. இப்படி ஊர் தோறும் - நகர் தோறும் - கிராமம் தோறும் விழா எடுக்கத் தொடங்கினால் நூற்றாண்டு விழாவையே பத்து ஆண்டுகளுக்கு கொண்டாட வேண்டி வரும்.
தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய தலைவர் கலைஞர் பெயரிலான சின்னங்கள் மாதம் தோறும் திறக்கப்பட இருக்கின்றன.
இதற்கு இடையில் ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. வரப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிப்பதை விட - யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக அமையப் போகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் தேர்தல் சடங்கு அல்ல 2024 நாடாளுமன்றத் தேர்தல்.
இந்தியாவில் ஜனநாயக அமைப்பு முறையையும் - இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தையும் காப்பாற்றுவதற்காக பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் இந்தியா முழுமைக்கும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் - மாறுபாடுகளை மறந்து - இந்தியாவைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும்.
மாறுபாடுகளை மறந்து - இந்தியாவைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும். இதனைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். என்னை வந்து சந்திக்கும் அகில இந்தியத் தலைவர்களிடம் சொல்லி வருகிறேன். மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்களிடமும் வலியுறுத்தி வருகிறேன்.
மதவாத - பாசிசவாத - எதேச்சதிகார பாஜகவை வீழ்த்துவதற்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் அகில இந்தியா முழுமைக்கும் ஒன்று சேர வேண்டுமே தவிர - தங்களுக்குள் தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. பிரிவினைகளால் வெல்லப் பார்க்கும் பாஜக. சாதியால், மதத்தால் பிரிவினையை விதைக்கும் அக்கட்சியானது -
அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளின் மூலமாக வெல்லப் பார்க்கும். அதற்கு அகில இந்தியத் தலைவர்கள் - மாநிலக் கட்சித் தலைவர்கள் - மாநிலங்களின் முதலமைச்சர்கள் யாரும் இரையாகிவிடக் கூடாது" என தெரிவித்துள்ளார்.