ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் ஒரே பாதையில் வந்ததால் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
அதோடு, இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 - 8 பெட்டிகள் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த பாதையில் விழுந்துள்ளது. அப்போது அந்த பாதையில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் இந்த ரயிலின் மீது மோதியதாகவும் யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலின் 2 - 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைக்கு பின்னரே முழு விவரமும் தெரியவரும்.
மனித தவறுகள் காரணமாகவோ அல்லது சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், உடனடியாக மீட்புப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவம் அறிந்து முதலில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்புப்பணியில் உடனடியாக களமிறங்கினர். அதோடு சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் உடனடியாக அந்த பகுதிக்கு மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில் பயணம் செய்த ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர். மேலும், ரயில் பெட்டிகளும் பயங்கர சேதமடைந்துள்ள நிலையில், அதில் ஏராளமானோர் சடலமாக மீட்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதோடு படுகாயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் தற்போதுவரை 280 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளாதாகவும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தகவலை ஒடிசா தலைமை செயலரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இந்த விபத்துக்கு சிக்னல் பிரச்சனையே முக்கிய காரணம் என்றும், சில ஊழியர்களின் தவறான நடவடிக்கையுமே காரணமாக கூறப்பட்டது. இதனிடையே விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளை தவிர்க்க ‘Kavach’ என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP Automatic Train Protection) அமைக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
2022 ஒன்றிய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், இந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முக்கியமான இந்த தடத்தில் அவ்வாறு எந்த பாதுகாப்பு அமைப்பும் இல்லை என்பதும் தெரியவந்தது. ஓட்டுநர் தவறு செய்தலும் விபத்தை தவிர்க்கும் தானியங்கி செயல்படான இந்த அமைப்பு செயல்பட்டிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர ரயில்வேயில் மட்டும் 1.4 லட்சம் ரயில் பாதுகாப்பு ஊழியர் பற்றாக்குறை இருப்பதும் அதற்குறிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இது தவிர பாஜக ஆட்சிக்கு வந்ததும் ரயில்வேக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்வது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ரயில்வேக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.