கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, ஜனதா தளம் கட்சிக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இந்த மூன்று கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 118 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜக 75 இடங்களிலும், ஜனதா தளம் 24 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து பெல்லாரி மாவட்டம் கூட்லகி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் சீனிவாஸ் வெற்றி பெற்றார். மேலும் சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கரே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகுமூர்த்தி வெற்றி. மேலும் சிவாஜி நகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஆசாத் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அமைச்சர் அசோகா 8530 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்துள்ளார். இவர் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆட்சியில் நான்கு முறை அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஹாலப்பா ஆச்சார், சோமண்ணா, பி.சி.நாகேஷ், நாராயண கவுடா, முருகேஷ் நிராணி, ஸ்ரீராமலு, சுதாகர் மற்றும் கோவிந்த கார்ஜோள் ஆகிய 8 பா.ஜ.க அமைச்சர்கள் வாக்கு எண்ணிக்கையில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய முடிவுகளின் படி தனிப்பெரும்பான்மை பெறுகிறது காங்கிரஸ் கட்சி.