தற்போதுள்ள இணைய உலகில் பலரும் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதில் முதன்மையானது கூகுள். இந்த நிறுவனம் பல ஆப்களை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் கூகுள் ட்ரான்ஸ்லேட். இதன் உதவியோடு மக்கள் எந்த மொழிகளை வேண்டுமானாலும் புரிந்து கொள்ள இயலும்.
இதனை பொதுதுவாக சில மொழிகள் தெரியாதவர்கள் பயன்படுத்துவர். அதிலும் ஆங்கிலம் தெரியாதவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் இந்த ட்ரான்ஸ்லேட் உதவியோடு தொலைந்து போன மூதாட்டியை அவரது குடும்பத்தாருடன் போலீசார் சேர்த்து வைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் தனது குடும்பத்தோடு உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் கோயிலுக்கு சென்றுள்ளார். அனைவரும் அங்கே சாமி தரிசனம் செய்து விட்டு, ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வழியில் மோசமான வானிலை காரணமாக மூதாட்டி குடும்பத்தாரிடம் இருந்து தொலைந்து விட்டார்.
தொலைந்து போன மூதாட்டிக்கு தெலுங்கு மொழி மட்டுமே தெரிந்துள்ளது. இந்தியா, ஆங்கிலமோ தெரியவில்லை என்பதால் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது நடந்து கொண்டே சென்றபோது கவுரிகுண்ட் என்ற பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தை கண்டுள்ளார். பின்னர் அங்கே சென்ற அந்த மூதாட்டி காவல்துறையினரிடம் உதவி கேட்டுள்ளார்.
காவல்துறைக்கோ தெலுங்கு மொழி தெரியவில்லை. மூதாட்டிக்கோ தெலுங்கை தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. இதனால் மூதாட்டி கூறுவது காவல்துறையினரால் புரிந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவரை அமர வைத்து தண்ணீர் கொடுத்து, அமைதி படுத்தினர். தொடர்ந்து அவர் பேசுவதை முழுமையாக கேட்டனர்.
மூதாட்டி பேசுவது காவல்துறையினருக்கு புரியவில்லை என்பதால், அவர்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியை நாடியுள்ளனர். அதில் மூதாட்டி பேசுவதை ரெக்கார்ட் செய்து, அதனை ட்ரான்ஸ்லேட் செய்து, மூதாட்டி சொல்வதை அறிந்துகொண்டனர் போலீசார். இதைத்தொடர்ந்து மூதாட்டியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை அதே ட்ரான்ஸ்லேட் உதவி மூலம் தெலுங்கி மொழியில் மொழிபெயர்த்து விசாரித்துள்ளனர்.
பின்னர் அந்த மூதாட்டி குடும்ப உறுப்பினர் ஒருவரது மொபைல் எண்ணை கொடுக்கவே, அதற்கு போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் உத்தரகாண்டில் உள்ள சொன்பிரயாக் (sonprayag) என்ற இடத்தில் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த மூதாட்டியை அங்கு பத்திரமாக அனுப்பி கூட்டி சென்ற போலீசார், அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர்.
மொழி தெரியாத ஊரில் தொலைந்து போன 68 வயது மூதாட்டியை, கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியோடு போலீசார் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.