வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து. இந்த நிலையில், சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாக பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த பேரணியில் வன்முறை பரவ வாய்ப்புள்ளது என்பதால் மாநிலம் முழுக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இந்த பேரணியில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிலையில், அங்கு குறிப்பிட்ட இரு சமூக மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.இந்த வன்முறை மாநிலம் முழுக்க பரவிய நிலையில், இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.
மோரே நகரில் மைத்தேயி குழுவினரை இலக்கு வைத்து குக்கி இனத்தவர் தாக்கிய நிலையில், அந்த பகுதியில் வசித்துவந்த தமிழ் சமூக மக்களின் சொத்துக்களும் தீக்கிரையாகின. தமிழர்களின் சில வீடுகள் எரிக்கப்பட்ட நிலையில், தமிழர்களுக்கு சொந்தமான சில உணவகங்களும் எரிக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறை காரணமாக மணிப்பூரில் இணையச் சேவையை முடக்க மாநில அரசு உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 114 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வன்முறைக்கு காரணமான பாஜக அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்த வன்முறையை விரைந்து நிற்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் நடந்த வன்முறையில் பல பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன. மேலும் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மக்கள் சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த சூழலில் வன்முறையில் பாதிக்கப்பட்ட வீடுகள், கடைகள் மக்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து வன்முறை நடைபெற்று வரும் நிலையில், கலவரக்காரர்களை கண்டவுடன் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வன்முறையில் 60 பேர் உயிரிழந்ததாகவும், 231 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறினார். மேலும் 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதோடு கலவரம் அதிகம் ஏற்பட்டுள்ள பகுதியில் இருக்கும் மக்களை மீட்டு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கபட்டுள்ளதாக கூறிய அவர், அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து வருவதாக தெரிவித்தார்.