இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார்.இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம் தொடர்பாக பேசிய பஜ்ரங் புனியா " இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்" என்று அறிவித்தார். பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த போராட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மல்யுத்த வீராங்கனைகள் சம்மதம் தெரிவித்தனர்.
மேலும், பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீதான புகார் குறித்து விசாரிக்க ஒன்றிய விளையாட்டு துறை சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் இந்த வன்கொடுமைக்கு காரணமாக இருந்த பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி தற்போது மீண்டும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும் FIR பதிவு செய்யப்படாத நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூறி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் போராட்டம் குறித்து தகவல் சேகரிக்க பத்திரிகையாளர் சாக்ஷி ஜோஷி மல்யுத்த வீரர்கள் போராடும் இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் நிகழ்வுகளை படம்பிடித்துக்கொண்டிருப்பதை கண்ட காவல்துறை அவரை தடுக்க முயன்றுள்ளது. ஆனாலும், தொடர்ந்து நான் அதே இடத்தில் இருப்பேன் என்று சாக்ஷி ஜோஷி கூறிய நிலையில், அவரை அங்கிருந்த ஒரு பெண் காவலர் கீழே தள்ளியுள்ளார். இதில் அவரின் ஆடை கிழிந்துள்ளது. மேலும் அவரை டெல்லி போலீசார் காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்தியபின்னர் இரவு ஒன்றரை மணி அளவில் சாக்ஷியை தனியாக சாலையில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். இது குறித்த தகவலை பத்திரிகையாளர் சாக்ஷி ஜோஷி வெளியிட்ட நிலையில், பலரும் டெல்லி காவல்துறையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.