இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் இளைஞர்கள்தான் அதிகம் என்றும் அதிலும் இளம் பெண்கள் தான் அதிகம் என்று பல்வேறு தரவுகள் கூறும் நிலையில் அந்த அவலத்தை ஜோக் ஆக மாற்றுவது ரசிக்கத்தக்கது அல்ல என தீக்கதிர் தலையங்கத்தில் சாடியுள்ளது.
இதுகுறித்து தீக்கதிர் நாளேடு இன்று (28.04.2023) வெளியிட்டு தலையங்கத்தில், “நகைச்சுவை உணர்ச்சி என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. மனக்கவலைகளை மாற்றக்கூடிய ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு. ‘எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்ச்சி இல்லையென்றால் நான் என்றைக்கோ தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பேன்’ என்றாராம் மகாத்மா காந்தி.
ஆனால், தற்கொலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஜோக் என்ற பெயரில் கூறியுள்ளது அல்லல்படும் இந்திய இளம் தலைமுறையை இழிவு செய்வதாக உள்ளது. ஒரு நகைச்சுவை என்பது யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது பொது நியதி.
பாஜக பரிவாரத்தின் புகழ்பாடுவதையும், மற்றவர்களை இழிவுபடுத்துவதையுமே தொழிலாகக் கொண்ட ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு பேராசிரியரின் மகள் ‘வாழ விரும்பவில்லை காங்காரியா ஏரியில் குதித்து சாகப் போகிறேன்’ என்று எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அடுத்த நாள் அந்த கடிதத்தை பார்த்த பேராசிரியர் ‘இத்தனை வருடங்கள் அவளுக்கு எடுத்துக் கூறியும் இப்போதும் காங்காரியா ஏரியின் பெயரை தவறாக எழுதியிருக்கிறாள்’ என்று கோபப்பட்டதாகவும் ‘ஜோக்’ அடித்திருக்கிறார். இது இப்பொழுது கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
கர்நாடகத்தில் பேசிய ராகுல் காந்தி சில குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் ஒரே மாதிரி முடிவதை விளையாட்டாகச் சொல்ல, அதை பெரிய பிரச்சனையாக்கி, சூரத்தில் வழக்குத் தொடர்ந்து, உடனடியாக விசாரிக்கச் செய்து தண்டனை அளித்து அவரது எம்.பி., பதவியையும் ரத்து செய்ய வைத்ததோடு, வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். அந்தளவுக்கு ஆட்சியாளர்களுக்கு ‘நகைச்சுவை உணர்ச்சி’ அதிகம்.
இந்தியாவில் இளைஞர்களின் தற்கொலை விகிதம் கவலை கொள்ளத்தக்கதாக உள்ளது. என்.சி.ஆர்.பி தகவல்களின் படி 2021 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இவர்களின் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை 1990களில் நடைமுறைப்படுத்தத் துவங்கிய பிறகு இந்திய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் பாதுகாப்பற்று இருப்பது போல உணர்வதாக பதின் பருவத்தினர் பதிவு செய்துள்ளனர். நரேந்திர மோடி ஆட்சி பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையால் வேலையின்மை என்பது அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். அது குறித்து கேட்டால் இளைஞர்கள் பக்கோடா விற்று பிழைத்துக் கொள்ளலாம் என்று வழிகாட்டுகிறார்கள்.
இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் இளைஞர்கள்தான் அதிகம் என்றும் அதிலும் இளம் பெண்கள் தான் அதிகம் என்று பல்வேறு தரவுகள் கூறும் நிலையில் அந்த அவலத்தை ஜோக் ஆக மாற்றுவது ரசிக்கத்தக்கது அல்ல. இது குரூர நகைச்சுவை ஆகும்.