மேற்குவங்க மாநிலம், பழைய மால்டா பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று வழக்கம்போல் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது 8ம் வகுப்பறைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரெ துப்பாக்கியைக் காட்டி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிரட்டியுள்ளார். துப்பாக்கியைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர்.
பிறகு இதுப்பற்றி தகவல் அறிந்து அங்கு உடனே வந்த போலிஸார் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென போலிஸார் அந்த நபர் மீது பாய்ந்து அவர் கையிலிருந்த துப்பாக்கியை கீழே தள்ளி விட்டு கைது செய்தனர்.
பிறகு அவரிடம் இருந்த கத்தி, இரண்டு திரவம் கொண்ட பாட்டில்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் விசாரணை செய்தபோது அவர் வல்லப் என்று தெரியவந்தது.
இவரது மனைவி மற்றும் மகன் கடந்த ஒருவருடமாகக் காணவில்லை. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறிப்படுகிறது. இதனால் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கவே பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக போலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட வல்லப்பிடம் போலிஸார் மேலும் விசாரணை நடத்தியுள்ளனர். பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபரைக் கைது செய்த போலிஸாருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். இது ஒரு சதித்திட்டமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.