பீகார் மாநிலம் பிஹ்தா என்ற பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து பெண் அதிகாரி ஒருவர் துணிச்சலாக இரண்டு ஆய்வாளர்களின் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது 10க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிகாரி அதிர்ச்சியடைந்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
பின்னர் அங்கு இருந்த கும்பல் திடீரென பெண் அதிகாரியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. பிறகு அவரை சாலையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அதிகாரியைத் தாக்கியதாக 44 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களையும் போலிஸார் கைது செய்ய முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "மணல் குவாரியை ஆய்வு செய்ய சென்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் சம்பவம் அதிகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.