மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல சமூக சேவகர் அப்பாசாகப் தர்மாதிகார். இவருக்கு மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழா நேற்று நவி மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பூஷன் விருதை சமூக சேவகர் அப்பாசாகப் தர்மாதிகாரிக்கு வழங்கினார்.
இந்த விருது வழங்கும் விழாவிற்காக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்களை பா.ஜ.க திரட்டி அழைத்து வந்துள்ளது.
மேலும் இந்த விழா நல்ல வெய்யில் அடிக்கும் நேரத்தில் நடைபெற்றுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்த விழாவிற்கு உரிய ஏற்பாடுகளை மாநில அரசு செய்யவில்லை. இதனால் வெப்பத்தில் மக்கள் அவதிப்பட்டுள்ளது. வெயிலின் வெப்பம் தாங்காமல் பலர் கூட்டத்தில் மயங்கி விழுந்துள்ளனர். இதனால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்குமேல் மக்கள் வெயிலில் இருந்துள்ளனர். இவர்களுக்கு குடிக்க தண்ணீர் வசதிகள் கூட ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை.
ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், விஐபிகளுக்கு மட்டும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் விழாவில் அவர்களுக்கு போதுமான தண்ணீர், கூடாரங்கள் போன்றவை அமைக்கப்படவில்லை. இதனால் வெய்யிலின் தாக்கம் தாங்காமல் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 600க்கும் மேற்பட்டோர் உடல்நலப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இலவச சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே விருது விழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குக் காங்கிரஸ் கட்சி மற்றும் உத்தவ் தாக்ரே பிரிவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். அரசியல் தலைவர்கள் முற்றும் விஐபிகளை வரவேற்பதில் மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தி, மக்களை கண்டு கொள்ளாமல் அவர்களைப் பலிவாங்கி இருக்கிறார்கள். வெய்யில் அடிக்கும் நேரத்தில் விருது விழா நடத்தியது முற்றிலும் தவறானது என குற்றம்சாட்டியுள்ளனர்.