கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்திலுள்ள ஹோலாலுஎன்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்வேதா (வயது 20) என்பவர் அங்கில்லை அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு கர்நாடக அரசு பேருந்தில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் படிக்கும் கல்லூரி அருகே பேரூந்துநிலையம் இல்லாத நிலையில், சற்று தொலைவில்தான் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதனால் அங்கு இறங்கி கல்லூரிக்கு சென்றுவந்துள்ளார். ஆனால் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கிளம்பு நேரம் ஆனா நிலையில் கல்லூரி செல்லவும் தாமதம் ஆகியுள்ளது.
இதனால் காலதாமதம் ஆகிவிட்டதால் கல்லூரி அருகில் பேருந்தை நிறுத்துமாறு ஸ்வேதா பேருந்து நடத்துனரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதனை ஏற்காத நடத்துனர் கல்லூரி அருகே பேருந்து நிற்காது என கூறியுள்ளார்.
கல்லூரிக்கு தாமதம் ஆவதால் பதறிய அந்த மாணவி பேருந்து சென்றுகொண்டிருக்கும்போதே அதிலிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் தலையில் படுகாயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்த செய்தி அறிந்ததும் ஸ்வேதாவின் மரணத்துக்கு நீதி கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி அருகே பேருந்து நிலையத்தை அமைக்கவேண்டும் என பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்றும் அதனால்தான் இந்த சம்பவம் நடைபெற்றது என்றும் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கை அனைத்தும் ஏற்கப்படும் என உறுதியளித்த நிலையில், போராட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.