புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் ஆன்லைன் பிட்னெஸ் ஆப் செயலி மூலம் குறைந்த நாட்களில் உங்கள் எடையைக் குறைக்க வேண்டுமா? நீங்கள் அழகாக வேண்டுமா? என கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்த ஆப் இணையத்தில் மூலம் பதிவிறக்கம் செய்த வீடியோவை பதிவிட்டு பெண் ஒருவர் பயிற்சி அளித்துள்ளார் . இந்த விளம்பரத்தை நம்பி பெண்கள் பலரும் இந்த ஆப்பை பின் தொடர ஆரம்பித்து உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பெண்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசிய பெண் ஒருவர், நாங்கள் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அழகிய கட்டுடலாக உங்கள் உடல் மாறும் அதனால் உங்களின் நிர்வாண படங்களை எடுத்து அனுப்பினால், அதற்கேற்ப உடல் பயிற்சிகளைப் பரிந்துரை செய்வோம் கூறியுள்ளார்.
இதை நம்பி பெண்கள் பலரும் தங்கள் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளனர் . பதிலுக்கு சில உடற்பயிற்சி குறிப்புகளையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். இதனால் பெண்கள் சிலர் அடுத்தடுத்து தங்களின் படத்தை அனுப்பி உடற்பயிற்சி ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து இந்த பெண்களுக்கு, உங்களின் அந்தரங்க புகைப்படம் என்னிடம் உள்ளது. எனது எண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாணமாக (Nude video call ) வர வேண்டும் என மர்ம நபர் ஒருவர் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலிஸில் புகார் அளித்தனர். இதையடுத்து சைபர் கிரைம் போலிஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.
அப்போது உடற்பயிற்சி வல்லுநர் பெண் போலப் பேசி பெண்களின் நிர்வாண போட்டோக்களை பெற்று, மிரட்டியது ஒரு ஆண் என தெரியவந்தது. மேலும் முத்தியால் பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திவாகர் என்ற வாலிபர்தான் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டு பெண்களிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலிஸார் திவாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெலகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் பெண்கள் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கி இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகிறது. எனவே இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் போன்றவற்றில் உண்மையான நபர் தான் இந்த இன்ஸ்டாகிராமையோ அல்லது டெலிகிராமை என்பதை உறுதி படித்து தங்களது தகவல்களை பகிர வேண்டும் என புதுச்சேரி சைபர் கிராம் போலிஸார் எச்சரித்துள்ளனர்.