கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்த தேர்தலில் தங்களது வேட்பாளர்களை இரண்டு கட்டமாகக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் 98 வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பா.ஜ.க தனது முதல் கட்டமாக 189 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தற்பொழுது ஒரு அமைச்சர் உள்பட 10 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
சூல்யா தொகுதியின் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராகவும் மீன் வளத்துறை அமைச்சராக உள்ள ஆங்காராவுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அணில் பெநேக்கே, மகாதேவப்பா, ரகுபதி பட், கோலிஹட்டி சேகர், லாலாஜி மென்டன், சஞ்சீவ், ராமன்னா லமானி, ஹாலட்டி, ஹொசதுர்கா கோலிகட்டி சேகர் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட பாஜக கட்சி வாய்ப்பு மறுத்துள்ளது.
முதல்வர் பசவராஜ் பொம்மை தனது சொந்த தொகுதியான ஷிகாகான் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 10 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு மறுத்துள்ளதால் அவர்களது ஆதரவாளர்கள் பா.ஜ.கவுக்கு எதிராக நேற்று இரவிலிருந்தே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பா.ஜ.க தலைமைக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க பின்னடைவைச் சந்திக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறி வரும் நிலையில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காத சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த கட்சிக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளது தேர்தலில் பா.ஜ.கவுக்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.