மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஹனுமான் மற்றும் மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு வியாழனன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில், "நான் இரவில் வெளியே செல்லும் போது இளைஞர்கள் பலர் போதையில் இருப்பதைப் பார்க்கிறேன்.
அப்போது காரில் இருந்து இறங்கி அவர்களை ஐந்து அல்லது ஏழு அறை கொடுக்க வேண்டும் என நான் உணர்கிறேன். நாம் பெண்களைத் தெய்வமாக நினைக்கிறோம். ஆனால் பெண்கள் மோசமான ஆடைகளை அணிந்துக் கொண்டு செல்கிறார்கள். இவர்கள் ராமாயணத்தில் வரும் சூர்ப்பகைகள் போல் இருக்கிறார்கள். கடவுள் உங்களுக்கு நல்ல உடலைக் கொடுத்துள்ளார். நல்ல ஆடைகளை அணியுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு நல்லதைக் கற்றுக்கொடுங்கள். நான் மிகவும் கவலைப்படுகிறேன்" என பெண்களை இழிவு படுத்தி பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு சமூகவலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் பேச்சுக்குப் பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். மேலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கீதா சர்மா, "பாஜக தலைவர்கள் பெண்களை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்துகின்றனர். இது அவர்களின் சிந்தனை மற்றும் அணுகுமுறையைக் காட்டுகிறது. சுதந்திர இந்தியாவில் பெண்களை இழிவுபடுத்திப் பேசிய கைலாஷ் விஜயவர்கியா மன்னிப்பு கேட்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.