கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கேரளா மாநிலம் ஆலப்புழா - கண்ணூர் விரைவு இரயில் கோழிக்கோடு, எலத்தூர் இரயில் நிலையம் அருகே சென்றுக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இரவு சுமார் 9.30 மணி அளவில் D1 கோச்சில் பயணம் மர்ம நபர் ஒருவர் தனது சக பயணிகள் மீது தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் பதறிப்போன பயணிகள் அலறியடிக்க, இதில் 2 வயது குழந்தை சஹாரா (2), ரஹ்மத், சௌபிக் என மூன்று பேர் ஓடும் இரயிலில் இருந்து குதித்துள்ளனர். அதோடு இரயிலினுள் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் ஒரு பயணி அபாய சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தினார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பியோடினார்.
இதையடுத்து இதுகுறித்து இரயில்வே போலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்து விசாரித்தனர். அதோடு ஓடும் இரயிலில் இருந்து குதித்த 3 பேரையும் தேடினர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் இரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த 8பேரை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற கோணத்தில் இதுகுறித்து என்.ஐ.ஏ-ம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் டெல்லி வரை சென்ற அதிகாரிகள், அங்கிருந்த அதிகாரிகளின் உதவியோடு நொய்டாவில் இருந்த ஹாரூத் சைபி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் தனக்கும் இதற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்றும், தான் டெல்லியை விட்டு வேறு இடத்திற்கு சென்றதே கிடையாது என்றும் வாக்குமூலம் கொடுத்தார். பின்னர் அவரது மொபைல் போன் உள்ளிட்டவையை ஆய்வு செய்தபோது அவர் கடந்த 2 மாத காலமாக டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளை தவிர வேறு எங்கும் செல்லவில்லை என்று நிரூபணம் ஆனது.
இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார். இதனிடையே இன்று காலை இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிராவில் இருந்த ஷாருக் சைபி என்ற வேறொரு நபரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
மகாராஷ்டிராவின் ரத்தினகிரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது அந்த நபர் சிக்கியதாக போலிசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.