மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சாந்தாகுருஸ் வக்கோலாவை சேர்ந்த 17 வயது சிறுமி சோபியா சேக். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அம்பாஜி மோரே என்ற 30 வயது இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.
இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அம்பாஜி மோரேவின் நடவடிக்கைகள் சோபியா சேக்குக்கு பிடிக்காத நிலையில், அவருடன் பேசுவதை சோபியா தவிர்த்துவந்துள்ளார். மேலும், காதலை விட்டுவிடவேண்டும் என்றும் அம்பாஜியிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த அம்பாஜி, சோபியா வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு சென்று முன்புபோல என்னிடம் பேசவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு சோபியா மறுத்த நிலையில், இருவருக்கும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அம்பாஜி தான் எடுத்துவந்திருந்த கத்தியால் சோபியாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சோபியா அலறித் துடிக்க அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சோபியாவின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இதன் காரணமாக அம்பாஜி அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில், அவரை சூழ்ந்த பொதுமக்கள் அம்பாஜியை மடக்கி பிடித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்ததும் அவரை போலிஸில் ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையே கத்தியால் குத்தப்பட்ட சோபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அது பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் 22 முறை கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் சோபியாவை கொலை செய்த அம்பாஜிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.