அரசு ஊழியர்கள் யாராவது இறந்தால் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அதே வேலை வழங்கப்படும் என்று அரசு விதி உள்ளது. அதன் படி தந்தையை இழந்த 5 வயது சிறுவனுக்கு காவல்துறையில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் போலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியின்போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இவரின் இறப்பால் அவரது மனைவியும், 3 வயது மகள் நமனும் தவித்து வந்துள்ளனர். இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாவனா குப்தாவின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்திற்குப் பண உதவிகளைச் செய்துள்ளார்.
இதையடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து , சிறுவனை அழைத்து அவரது தந்தை பணியாற்றிய கான்ஸ்டபிள் பணிக்கான ஆணைய வழங்கியுள்ளார். அப்போது அவரது தாயும் உடனிருந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இணைய வாசிகள் பலரும் எஸ்.பி பாவனாக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சிறுவனின் தாய் கூறுகையில், "கணவர் இறந்தது கஷ்டமாகத்தான் இருக்கிறது. இப்போது என் குழந்தை காவலராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார். அரசு விதிகளின் படி 18 வயது நிறைவடைந்த பிறகே சிறுவன் நமன் கான்ஸ்டபிளாக பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.