அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 28-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு பல லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி நிறுவன பங்குகளின் இந்த சரிவு காரணமாக அதில் முதலீடு செய்திருந்த LIC, உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.அதானியின் நிறுவனங்களில் LIC நிறுவனம் ரூ.30,127 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 24 ஆம் தேதி 72,193.87 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது வரை அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்து வருவதால் தற்போது இதன் மதிப்பு ரூ.26,861.88 கோடியாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஊழியர்களின் பி.எப் பணத்தின் மதிப்பும் அதானியால் குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி. எப் சேமிப்பு பணத்தை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது. அந்த தொகையில் 1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட்டில் (ETF ) வழியாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
அதானியின் நிறுவனங்களான அதானி என்டர்ப்ரைஸ், அதானி போர்ட் பங்குகளிலும் EPFO அமைப்பு கணிசமான பி.எப் பணத்தை முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், தற்போது அதானியின் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக இந்த பி.எப் பண முதலீட்டு பணமும் தனது மதிப்பை இழந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களில் முதலாளீடு செய்துள்ள பி.எப் பணத்தை திரும்பபெறவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் முதலீடு செய்யப்பட்டுள்ள பி.எப் பணம் திரும்பப்பெறப்படும் என்ற அச்சம் காரணமாக ஏற்கனவே வீழ்ச்சியில் சென்றுகொண்டிருக்கும் அதானியின் பங்குகள் இன்று மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் அதானிக்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. இதனிடையே அதானி குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், பி.எப் வட்டி விகிதம் 8.10%ல் இருந்து 8.15% ஆக அதிகரிக்கப்படுவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.