உலகமே கொரோனா என்னும் கொடிய உயிர்க்கொல்லி தொற்று நோயால் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சிக்கித் தவித்தது. இந்த தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் மக்களின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதித்தது. தற்போதுதான் உலகமே மூச்சைவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு வருகிறது.
இந்த கொடிய கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்துதான் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் உயிரிழப்பும் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசிதானா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதற்கு ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.
மக்களவை உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங், கொரோனா காலத்திற்குப் பிறகு திடீரென மாரடைப்பு ஏற்படக்கூடிய நிகழ்வு அதிகரித்துள்ளதா? இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? என எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், "கொரோனா காலத்திற்குப் பிறகு அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்த ஒரு தரவுகளும் ஒன்றிய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்குப் பிறகு மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. மேலும் இது தொடர்பாக எந்த ஒரு ஆய்வுகளையும் ஐ.சி.எம்.ஆர் மேற்கொள்ளவில்லை" என தெரிவித்துள்ளார்.